

மும்பை: மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை பார் உரிமையாளர்களை அச்சுறுத்தி பணம் பறித்ததாக எழுந்த புகாரில் பதவி விலகினார். இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ-யின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கசிந்தது.
இதுதொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் சார்பில் அவரது வழக்கறிஞர் ஆனந்த் டாகாவிடம் சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர் அபிஷேக் திவாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆவணங்களை கசியவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்த் டாகா, அபிஷேக் திவாரி ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை மும்பையில் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் இவர்களிடம் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிபிஐ-யின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியை கசியவிடுவதற்காக தேஷ்முக்கின் வழக்கறிஞர் டாகாவிடம், சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர் அபிஷேக் திவாரி, ஆப்பிள் ஐபோன்-12 ரக செல்போனை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையிலிருந்து (எஃப்ஐஆர்) இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.