

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வளாகத்தில் ஹனுமன் கோயில் கட்டவும் இடம் ஒதுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ.க்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சிதலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் பாஜக தவிர மற்ற கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இடம் ஒதுக்கும்படி சபாநாயகர் ரபீந்தரநாத் மஹ்தோவிடம் கோரினர்.
ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சபாநாயகர் மஹ்தோ, அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை கட்டிடத்தின் எண் டி.டபில்யு 348 அறையை ஒதுக்கினார். இதற்கான உத்தரவை துணை செயலாளர் நவீன்குமார் வெளியிட்டார். இதையடுத்து பாஜக எம்எல்ஏ.க்களும் சபாநாயகரை சந்தித்து, தங்களுக்கும் அனுமன் கோயில் கட்ட வளாகத்தில் இடம் அளிக்கும்படி கோரினர்.
எதிர்க்கவில்லை...
இதுகுறித்து ஜார்க்கண்ட் முன்னாள் சபாநாயகரும் பாஜகஎம்எல்ஏ.க்கள் தலைவருமான சி.பி.சிங் கூறும்போது, ‘‘முஸ்லிம்எம்எல்ஏ.க்களுக்காக தொழுகைக்கான அறை ஒதுக்கியதை நாங்கள்எதிர்க்கவில்லை. எங்களை போன்றஇந்து எம்எல்ஏ.க்களுக்காகவும் அனுமன் கோயில் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். இதை சபாநாயகர் அனுமதித்தால் எங்களது சொந்த செலவில் கோயிலை கட்டிக் கொள்வோம்’’ என்று தெரிவித்தார்.
கடந்த 2000-ம் ஆண்டில்
பிஹாரில் இருந்து பிரிந்த மாநிலம் ஜார்க்கண்ட். இதனால், பிஹாரின் ஆட்சி முறை ஜார்க்கண்டிலும் அதிகம் நடைபெறு வதாகக் கருதப் படுகிறது. பிஹாரிலும் முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதைப்பின்பற்றி ஜார்க்கண்டிலும் தனிஅறை ஒதுக்கியதாகவும் கூறுகின்றனர்.
தவறான கலாச்சாரம்...
இதுகுறித்து ஜார்கண்டின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பாபுலால் மராண்டி கூறும்போது, ‘‘சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் கோயில்போன்றது. இதை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக மாற்றிவிடக் கூடாது. இதன்மூலம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஒரு தவறான கலாச்சாரத்துக்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், பாஜக சார்பில்போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.