Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

முகேஷ் அம்பானியை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் மீது 9,000 பக்க குற்றப்பத்திரிகை: சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியைகொலை செய்ய முயற்சித்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் உட்பட 10 பேர் மீது 9,000 பக்கத்துக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி யின் அன்ட்லியா பங்களா அருகே, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று அநாதையாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முகேஷ்அம்பானியை கொலை செய்வதற்காக அந்தக் கார் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக முதலில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தலைமையில் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்தினர். கடைசியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கை எடுத்துக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில் முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட கார், தானேவைச் சேர்ந்த வர்த்தகர் மான்சுக் ஹிரன் என்பவருடையது என்று தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது, கார் காணாமல் போனதாகவும்,

இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு சில நாட்களில் மான்சுக் ஹிரன் மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ்தான் காரணம் என்று ஹிரனின் குடும் பத்தார் குற்றம் சாட்டினர்.

அதன் அடிப்படையில் விசா ரணை நடத்திய என்ஐஏ, போலீஸ் அதிகாரி சச்சின் வாஸை கைது செய்தது. அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. ஹிரனின் ஸ்கார்பியோ காரை பயன்படுத்தியது, அவரது மரணம் ஆகியவற்றுக்கும் சச்சின் வாஸுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில், வெடிபொருட் களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஒருவர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளையும் என்ஐஏ அதிகாரிகள் கைப் பற்றினர்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ், ஓய்வு பெற்ற போலீஸ் துணை ஆணையர் பிரதீப் சர்மா உட்பட 10 பேர் மீது கடந்த வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மொத்தம் 9,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், அனைவர் மீதும் தீவிரவாத தடுப்புக்குரிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தவிர ஐபிசி சட்டப் பிரிவுகள் 302 (கொலை), 120பி (சதி), 201 (தடயங்களை அழித்தல்) மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் போலீஸார் பலர் உட்பட 200 சாட்சிகளின் வாக்குமூலங்களும் அடங்கி உள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x