

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் நேற்று தொலைபேசி வழியாக பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒரு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில், ரூ. 300 சிறப்பு ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினை குறித்து பலர் புகார் கூறினர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பப்படும் பாராயணங்கள் அருமையாக உள்ளதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சென்னையை சேர்ந்த சியாமளா பேசும்போது, "லட்டு பிரசாதத்தின் தரம் முன்பு இருந்ததை போல் இல்லை, தரத்தை உயர்த்த வேண்டும்" என கோரினார். இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரி ஜவஹர் ரெட்டி பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. லட்டு கவர்களுக்கு பதில் துணி பை, சணல் பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நவநீத சேவை கடந்த கிருஷ்ண ஜெயந்தி முதல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாட்டு பசுக்களின் மூலம் வெண்ணெய் எடுத்து, அதன் மூலம் நெய் தயாரிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மை மூலம் விளைந்த பொருட்களை சுவாமி நைவேத்தியத்திற்கு பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு ஜவஹர் ரெட்டி தெரிவித்தார்.