

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்கும் வகையில் அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் படைத்த எட்டு ‘எஃப்-16’ போர் விமானங்களை விற்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே இதற்கு குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என ஒபாமா நிர்வாகம் நேற்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது.
இது குறித்து பென்டகன் வெளி யிட்ட அறிக்கையில், ‘பாகிஸ் தானுக்கு ரூ.4,760 கோடி மதிப்புள்ள போர் விமானங்களை விற்க அரசு முடிவு செய்துள்ளது. வெளியுறவு கொள்கையின் அடிப்படையிலும், தெற்கு ஆசியா வின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளது’ என தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான பரிந்துரையை ஒபாமா நிர்வாகம் அறிவிக்கையாக வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் ஒப்புதலுக்காக அந்நாட்டு காங்கிரஸில் தாக்கல் செய்துள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் இந்த பரிந்துரையின் மீது விவாதம் நடத்தப்பட்டு ஒருமாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். ஒருவேளை எதிர்க்கட்சிகள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தால், பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பதில் சிக்கல் ஏற்படும்.
இந்தியா ஏமாற்றம்
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் ரிச்சர்டு வெர்மாவை நேரில் அழைத்து அதிருப்தியையும் கண் டனத்தையும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்க எடுக்கப்பட்ட முடிவு, இந்தியாவுக்கு எதிரானது என்றும் இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் வெர்மாவிடம் இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச் சகமும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட் டுள்ளது. அதில், ‘பாகிஸ்தானுக்கு ‘எஃப்-16’ ரக போர் விமானங்களை விற்பதற்காக முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிக்கையை, ஒபாமா நிர்வாகம் வெளி யிட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் செய்திதொடர்பாளர் மணிஷ் திவாரி கூறியதாவது: பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை விநியோகிக்கும் நாடுகளாக அமெரிக்காவும், ரஷ்யாவும் மாறிவிட்டன. வெளியுறவு கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே சாதனை இது தான். ‘எஃப்-16’ ரக போர் விமானங்கள் சாதாரணமானவை அல்ல. ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சரிசமமான ராணுவ பலத்தை அடியோடு சாய்க்கக் கூடிய திறன் படைத்தவை. இவ்வாறு அவர் கூறினார்.