

மத்தியப்பிரதேசத்தில் வெள்ளியிலான பிரதமர் நரேந்தர மோடியின் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தோரின் நகை வியாபாரி 150 கிராம் எடையில் இச்சிலைகளை தயாரித்துள்ளார்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் குஜராத் முதல்வராக இருந்த நரேந்தர மோடி. அப்போது முதல் வீசத் துவங்கி ’மோடி அலை’ ஏதாவது ஒரு வகையில் தொடர்கிறது.
இதில், பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள், அவரது தீவிர ஆதரவாளர்களால் பின்பற்றப்பட்டன. உதாரணமாக, பிரதமர் மோடி, தனது குர்தா பைஜாமாவிற்கு மேலாக அணியும் முண்டாசு கோட், ‘மோடி ஜாக்கெட்’ எனும் பெயரில் பிரபலமானது.
இதை தொடர்ந்து புனே உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு கோயிலை கட்டியும் வணங்கி வருகின்றனர். இந்தவகையில், புதிதாக மோடியின் வெள்ளியிலான உருவச் சிலை சந்தைகளில் அறிமுகமாகி உள்ளது.
இதை மபி மாநிலம் இந்தோரின் நகை வியாபாரியான நிர்மல் வர்மா அறிமுகப்படுத்தி உள்ளார். இதில் அவர் பிரதமர் அணிவது போல் குர்தாவை மட்டும் ஒவ்வொரு சிலையிலும் ஒரு வர்ணத்தில் அமைத்துள்ளார்.
குறைந்தது 150 கிராம் வெள்ளி எடையிலான இந்த சிலையின் விலை ரூ.11,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மபிவாசிகள் இடையே மெல்ல ஆதரவு பெருகி வருகிறது.
இச்சிலையை விரைவில் நாடு முழுவதிலும் உள்ள சந்தைகளில் அனுப்ப இருப்பதாக வியாபாரி நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார். இதற்காக அதிக எண்ணிக்கையிலான சிலைகளை தயாரிக்கும் பணியில் அவர் இறங்கியுள்ளார்.
பிரபல நட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் பிரதமர் மோடியின் தீவிர விசிறியாகி விட்டார் நிர்மல் வர்மா. இவர், இந்தோர் பாஜகவின் வியாபாரப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.