

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் சர்வதேச கடற்படை விழாவின் 2-வது நாளானநேற்று, இந்திய கடற்படை கப்பல்களின் சாகசங்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய கடற்படை சார்பில் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில்முப்படை களின் தளபதியான குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் பயணம் செய்தபடி இந்திய கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திர பாபு நாயுடு மற்றும் கடற்படை அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
சர்வதேச கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்களின் இந்த அணிவகுப்பு பல நாடுகளின் நட்பை வெளிபடுத்தும் விதமாக உள்ளது. உலகில் பல இடங்களில் இருந்து வந்துள்ள இந்த போர்க் கப்பல்கள், நமது கடல் எல்லைக்கு வந்தது நமக்கு பெருமை சேர்க்கும் அம்சமாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் கடல் எல்லை பாதுகாப்பு வலுவடையும்.
மேலும், கடல் எல்லையின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். கடல் எல்லை பாதுகாப்பில் கடற்படையின் பணிகள் மிகவும் முக்கியமானவை. இதன் மூலம் இரு நாட்டின் கடல் எல்லைகளுக்கிடையே, அமைதி நிலை நாட்டப்படுவதுடன் சட்டம்-ஒழுங்கும் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதி யில் இந்திய கடற்படையின் பணி மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடல் வழி பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவற்றுக்கு கடற் படை உறுதுணையாகஉள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார். பின்னர் கப்பற்படைக்குச் சொந்தமான போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.