

கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களான தட்சின கன்னடா, உடுப்பி, சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்களில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வந்த நர்சிங் மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கர்நாடகா வருவோர் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும். இதற்கான பரிசோதனை 72 மணி நேரத்துக்கு முன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு 2 தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவந்தாலும் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும். இவர்களுக்கு 6-வது நாளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது தொற்று இல்லை என முடிவு வந்தால் மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.