தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி சிறுமி கொலை: 20 ரூபாயை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்

தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தி சிறுமி கொலை: 20 ரூபாயை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்
Updated on
1 min read

20 ரூபாயை திருடியபோது ஏழு வயது சிறுமி கையும் களவுமாக பிடித்ததால் அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஹஜ்ரா. இவர் கடந்த திங்கள்கிழமை தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக பக்கத்து வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு சிறுமி பியூட்டி சாகர் (7) மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

பிரகாஷ் ஹஜ்ரா செல்போனை சார்ஜரில் பொருத்திவிட்டு வரும்போது அங்கு பணப் பை இருந்துள்ளது. அதில் இருந்து 20 ரூபாயை ஹஜ்ரா திருடியுள்ளார். விளையாட் டில் ஆர்வமாக இருந்த சிறுமி பியூட்டி சாகர் ஹஜ்ராவை கையும் களவுமாகப் பிடித்துள் ளார்.

தனது திருட்டு அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று கருதிய பிரகாஷ் ஹஜ்ரா, சிறுமியின் வாயைப் பொத்தி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தலையை அமுக்கி மூழ்கடித்துள்ளார். தண்ணீரில் தத்தளித்த சிறுமி சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து ஹஜ்ரா தப்பியோடி விட்டார்.

கூலி வேலைக்குச் சென்றிருந்த சிறுமியின் தாயார் சோனாலி (25) வீட்டுக்குத் திரும்பிய போது தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்தபோது சிறுமியின் சகோதரர் சாகர் (10) வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். பிரகாஷ் ஹஜ்ரா வீட்டுக்குள் நுழைந்ததை அவர் போலீஸில் தெரிவித்தார்.

ஹஜ்ராவிடம் விசாரித்தபோது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மதுபானம் வாங்குவதற்காக பணத்தை திருடிய தாக போலீஸில் அவர் வாக்குமூலம் அளித்துள் ளார். அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரகாஷ் ஹஜ்ராவும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் மேற்கு வங்கத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். பிழைப்புக்காக மும்பையில் குடியேறிய அவர்கள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் நட்புக்கு நம்பிக்கை துரோகம் செய்து வெறும் 20 ரூபாய்க்காக ஏழு வயது சிறுமியை பிரகாஷ் ஹஜ்ரா கொலை செய்த சம்பவம் மும்பை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in