கேரளாவில் கட்டுப்பாட்டை மீறும் கரோனா: 11-ம் வகுப்புத் தேர்வை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டை மீறிச் செல்வதால், வரும் 6-ம் தேதி தொடங்கும் 11-ம் வகுப்புத் தேர்வுகளை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நாட்டில் தினசரி கரோனா தொற்றில் 60 சதவீதம் கேரளாவில்தான் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரம் பேர் புதிதாக கேரளாவில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 41 லட்சம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றை ஆய்வு செய்த மத்திய சுகாதாரக் குழுவினர், தேவையான இடங்களில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தலாம் எனப் பரிந்துரைத்தனர்.

கேரளாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடக மாநில அரசுகளும் விழிப்படைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கர்நாடக மாநிலத்துக்குள் வரும் கேரள மக்கள் 72 மணி நேரத்துக்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தச் சூழலில் வரும் 6-ம் தேதி மாநிலம் முழுவதும் 11-ம் வகுப்புத் தேர்வு தொடங்க இருக்கிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதாமல், நேரடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

கேரளாவில் கரோனா வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில் மாணவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினால் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும் ஆதலால் தேர்வை நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவில் தலையிடமுடியாது எனத் தெரிவித்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஏ.எம்.கான்வில்கர், சிடி ரவி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “கேரளாவில் கரோனா பரவல் ஆபத்தான சூழலில் இருக்கிறது. நாட்டின் 70 சதவீதப் பரவல் கேரளாவில்தான் இருக்கிறது. நாள்தோறும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அது ஆபத்தாக முடியும்.

கேரளாவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இருந்தபோதிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வரும் 6-ம் தேதி நடக்கும் 11-ம் வகுப்புத் தேர்வை ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்க அரசுக்கு உத்தரவிடுகிறோம்” என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in