

உத்தரப் பிரதேசத்தில் பி.டெக் பொறியியல் கல்வி இந்தி மொழியில் போதிக்கப்பட உள்ளது. இதை அம்மாநில முதல் கல்வி நிறுவனமாக பனாரஸ் இந்து பல்கலைகழகத்திலுள்ள (பிஎச்யு) ஐஐடி தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தொகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி நிறுவனம், பிஎச்யு. பழம்பெரும் பல்கலைக்கழகமான இதன் சிறந்த பொறியியல் கல்லூரிக்கு ஐஐடி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் பி.டெக் பயில வருவது உண்டு. இதற்காக, மத்திய அரசு நடத்தும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் அனுமதி கிடைக்கிறது.
இந்நிலையில், பிஎச்யூவின் ஐஐடியில் இந்தி மொழியில் பி.டெக் கல்வி தொடங்கப்பட உள்ளது. இது உ.பி. மாநிலத்தில் இந்தியில் தொடங்கப்படும் முதல் பொறியியல் கல்வி நிறுவனமாக இருக்கும்.
இதுகுறித்து பிஎச்யுவின் ஐஐடி இயக்குநரும், அதன் அதிகாரபூர்வ மொழிக் குழுவின் தலைவருமான பிரோமத்குமார் ஜெயின் கூறும்போது, ''மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி தாய்மொழியில் பொறியியல் கல்வி ஐஐடியில் அறிமுகமாகிறது. இதற்காக, ஐஐடியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்தி மொழி வழியில் பாடங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம், இப்பகுதியின் மொழியான இந்தி கவுரவிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
மத்தியப் பல்கலைக்கழகமான பிஎச்யுவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் தென்னிந்திய மாணவர்களும் கல்வி பயில வருவது உண்டு. இச்சூழலில், அவர்களுக்கு இந்தியின் அடிப்படைக் கல்வி அறியாமல் அம்மொழியில் பொறியியல் பாடம் பயில்வது சிக்கலாகும் எனவும் கருதப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு அமலாக்கிய புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் நிறுவனங்களின் நிர்வாகிக்கும் அமைப்பான அகில இந்திய தொழிநுட்பக் கல்வி கவுன்சிலும் இதை அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து அக்கவுன்சில் நாட்டின் அனைத்து பொறியியல் கல்வியகங்களில் அவை அமைந்துள்ள பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் பாடங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இப்பாடங்கள் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் நடத்த அனுமதித்துள்ளது. தமிழகத்தில் தமிழில் பாடங்கள் நடத்தும் முறை அதன் பொறியியல் கல்வி நிறுவனங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.