

கரோனா 2-ம் அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படவுள்ளன. இந்த சூழலில் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கட்டுப்பாட்டோடு கொண்டாடப்பட வேண்டும். அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட வேண்டும். எந்தவொரு பொது இடத்திலும் முகமூடி அணிவது முற்றிலும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோலவே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில் "இந்தியாவில் கோவிட் -19 இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை. நாம் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் எனவே அந்தந்த பகுதிகளில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்.
இது மக்கள் அனைவருக்கும் விடுக்கப்படும் வேண்டுகோள்.கோவிட் -19 நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கோவிட் சூழலுக்கு ஏற்ப நடத்தை விதிமுறைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.