

கர்நாடகாவில் உள்ள ராஜீவ் காந்தி நாகர்ஹோலே தேசிய பூங்கா பெயரை மாற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
விளையாட்டுத் துறையில் சாதிப்போருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த விருதின் பெயர் மாற்றம் அண்மையில் செய்யப்பட்டது.
இந்த விருது மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா விருது என்றே அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்திய ஹாக்கி சாதனையாளரான தியான் சந்தை கவுரவிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ஓரங்க் என்ற இடத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் பெயர் ஓரங்க் தேசிய பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்ய அசாமில் ஆளும் பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயரை மாற்றிய நிலையில், தற்போது அசாம் அரசு பூங்காவின் பெயரில் இருந்து ராஜீவ் காந்தி பெயரை நீக்கியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கர்நாடகாவில் உள்ள ராஜீவ் காந்தி நாகர்ஹோலே தேசிய பூங்கா பெயரை மாற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவைச் சேரந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் வி கட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ராஜீவ் காந்தி நாகர்ஹோலே தேசிய பூங்காவை 'எஃப்எம் கேஎம் கரியப்பா நாகர்ஹோலே தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம்' என மாற்ற வேண்டும் என வலியறுத்தியுள்ளார். கரியப்பா நமது நாட்டின் ராணுவ தளபதியாக திறன்பட பணியாற்றி பெரும் புகழ் பெற்றவர் ஆவார்.