

பதான்கோட் விமானப்படை தள தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தலைவர் மசூத் அசார் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகரான சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த திங்கள்கிழமை சர்தாஜ் அஜிஸ் பேட்டியளித்தார். அவரிடம் பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அப்போது அவர் தாக்குதலில் தொடர்பு டைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரை போலீஸார் கைது செய்து தங்களது பாதுகாப்பில் வைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த தகவலை இந்திய அரசுக்கு ஏன் முறைப்படி தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் பாகிஸ்தான் போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் மசூத் அசார் பெயர் இடம்பெறவில்லையே என கேட்டதற்கு அவர், ‘‘முதல் தகவல் அறிக்கை என்பது விசாரணையின் முதல் கட்டம் தான். மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணைக்கு பின், மசூத் அசாரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் நிச்சயம் இடம் பெறும்’’ என தெரிவித்தார்.
மேலும் அவர் பதான் கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் ஜெய்ஷ் இ முகமது தலைமை அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும், பாகிஸ் தானின் சிறப்பு புலனாய்வு குழு அடுத்த இரு வாரங்களுக்குள் இந்தியாவுக்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தவுள்ள தாகவும் தெரிவித்தார்.