

தோஹாவில் தலிபான் தலைவர்களை இந்திய தூதர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய ஏன் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர், இந்தியர்கள் நலன், ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தலிபான் பிரதிநிதியுடன் இந்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது.
கத்தார் நாட்டில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், இந்தியத் தூதர் தீபக் மிட்டலைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இதுகுறித்து கூறியதாவது:
தலிபான் தீவிரவாத அமைப்பா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தோஹாவில் தலிபானை இந்திய தூதர் சந்தித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழும்புகின்றன.
இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அப்படி சந்தித்தது உண்மையென்றால் தலிபான் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தலிபான்கள் தீவிரவாதிகள் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு என்றால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்பதையும் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் அங்கு எங்கள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி பைசாபாத், செப்டம்பர் 8 ஆம் தேதி சுல்தான்பூர், செப்டம்பர் 9 ஆம் தேதி பாராபாங்கிக்கு செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.