Last Updated : 02 Sep, 2021 11:01 AM

 

Published : 02 Sep 2021 11:01 AM
Last Updated : 02 Sep 2021 11:01 AM

காங்கிரஸில் சேர்வாரா பிரசாந்த் கிஷோர்? மூத்த தலைவர்களிடேயே வலுக்கும் எதிர்ப்பு: சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவு

பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரைச் சேர்ப்பது குறித்து தலைவர் சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளார். இது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

அதன்பின் 2015ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.

ஆனால், கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேரப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்ப கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகப்படுத்தினார்.

2022ஆம் ஆண்டு கோவா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. அதிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 2-வது முறையாகக் கைப்பற்ற பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் வியூகம் வகுத்து வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்து பணியாற்றி வருகிறார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்ப்பது நல்ல பலன் அளிக்கும் என்று கட்சிக்குள் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல் உழைக்காமல், எதிரணியிலிருந்து வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிராசாந்த் கிஷோர் வருவதை சோனியா காந்திக்குக் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த ஜி23 மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை. பிரசாந்த் கிஷோரிடம் மந்திரக் கோல் ஏதுமில்லை. அவர் கட்சிக்குள் வந்தாலும் தேர்தல் வெற்றியில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்படாது என அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோரைக் கட்சிக்குள் கொண்டுவருவதில் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சிக்குள் தான் வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும், கட்சிக்கு எவ்வாறு புததுணர்ச்சி ஊட்ட முடியும், பேரணிகள், பொதுக் கூட்டங்களை நடத்துவது குறித்துப் பல்வேறு செயல்திட்டங்களை காங்கிரஸ் தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அகமது படேல் மறைவுக்குப் பின் சிறந்த அரசியல் ஆலோசகர் இன்றி சோனியா காந்தி சிரமப்பட்டு வருகிறார். சரியான அரசியல் ஆலோசகர் இன்றி பல்வேறு தேர்தல்களில் தோல்விகளை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளதால், பிரசாந்த் கிஷோர் வருகை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் தேர்தல் களத்தில் பணியாற்றியபோது எந்தவிதமான முரண்பாடும் ஏற்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி செயல்படும் விதம் குறித்தும், காலத்துக்கு ஏற்ப மாறாதது குறித்தும் கிஷோர் விமர்சித்திருந்தார்.
ஆதலால், பிரசாந்த் கிஷோரைக் காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதா அல்லது அதிருப்தி தலைவர்களிடம் கருத்தைக் கேட்டு அவரை நிராகரிப்பதா என்பது குறித்து சோனியா காந்தி விரைவில் முடிவு எடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x