

இந்தியக் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக பசுக்கள் இருப்பதால் அவற்றுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி, அதை தேசிய விலங்காக அறிவி்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி. அரசின் பசுவதைச் சட்டத்தின் கீழ் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி சேகர் யாதவ் அமர்வில் விசாிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஜாவித்தின் ஜாமீன் மனுவை நீதிபதி சேகர் யாதவ் நிராகரித்து 12 பக்கங்களில் உத்தரவு பிறப்பித்தார். அதில் நீதிபதி சேகர் யாதவ் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் புராதனங்களான வேதங்கள், மகாபாரதம் ஆகியவற்றில் பசு மிகவும் முக்கியமானது என்பதும், இந்தியக் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக பசு இருப்பதும் கூறப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழல்களைப் பார்க்கும் போது, பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
பசுப் பாதுகாப்பு என்பதை இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக கொண்டுவர வேண்டும். நாட்டின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பலவீனமடைந்துவிட்டால் தேசம் பலவீனமடையும் என்பது நமக்குத் தெரியும்.
ஆதலால், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பசுவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதாவைக் கொண்டுவர வேண்டும், பசுவுக்கு கொடுமை செய்வோரை கடுமையாக தண்டிக்கும் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்.
வாழும் உரிமை என்பது கொல்வதற்கான உரிமையைவிட மேலானது. மாட்டிறைச்சி உண்பதை ஒருபோதும் அடிப்படை உரிமையாக எடுக்க முடியாது. மனுதாரர் செய்த குற்றம் முதல்முறைஅல்ல, இதற்கு முன்பும் பசுவதை செய்து சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் வெளியேவந்து அதே குற்றத்தைச் செய்வார்.
பசுவின் முக்கியத்துவம் குறித்து இந்துக்கள் புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், வரலாற்றில் முஸ்லிம் ஆட்சியாளர்களும் அதே கடைபிடித்து, இந்தியாவின் கலாச்சாரத்தில் பசுவின் பங்கை உணர்ந்திருந்தனர். பேரரசர் பாபர், ஹுமாயூன், அக்பர் போன்றோர் தங்களின் பண்டிகைகளில் பசுவதை செய்வதை தடை செய்தனர். மைசூரை ஆண்ட ஹைதர் அலியும் பசுவதை செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றினார்.
அடிப்படை உரிமைகள் என்பது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசுவை வணங்குபவர்கள், அதைச் சார்ந்துள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் பொருந்தும். நாடுமுழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள் கவலைக்கிடமாக இருக்கிறது, பசுக்களை பாதுகாப்பது குறித்துப் பேசியவர்கள் இன்று அதன் எதிரிகளாக மாறியுள்ளார்கள்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பசு சேவை ஆயோக் தலைவர் ஷியாம் நந்தன் சிங் கூறுகையில் “ நீதிமன்றத்தின் உத்தரவை நான் வரவேற்கிறேன், தேசிய விலங்காக பசுவை அறிவிக்க உத்தரவிட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கோரிக்கையை நீண்டநாட்களாக சமூகம் வலியுறுத்தி வருகிறது. நீண்டகாலத்துக்குப்பின் இந்த கோரிக்கைக்கு நல்ல முடிவு கிட்டியுள்ளது. பசுவுக்குள் பல கடவுள்கள் அடங்கியுள்ளனர், பசு விலங்கு மட்டுமல்ல, நம்முடைய கலாச்சாரம். பசுவுக்கு அடிப்படை உரிமை வழங்க உத்தரவிட்டது நல்ல முடிவு” எனத் தெரிவித்தார்.