

உலகின் மிக உயரமான, பொது வாகனப் போக்குவரத்துக்கான சாலை லடாக்கில் திறக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 18,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
லடாக்கின் பாங்காங் ஏரியை லே நகருடன் இணைக்கும் புதிய சாலை, இந்திய ராணுவத்தின் 58-வது இன்ஜினீயர் ரெஜிமென்ட் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இது லே – பாங்காங் இடையிலான தூரத்தை 41 கி.மீ. குறைக்கிறது. இந்த சாலையை லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “லே மாவட்டத்தில் உள்ள கர்துங்லா கணவாய்தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக இதுவரை இருந்தது. 18,300 அடி உயரத்தில் அந்த சாலை அமைந்துள்ளது. தற்போது அதைவிட அதிக உயரத்தில் புதிய சாலை திறக்கப்பட்டுள்ளது. கேலா கணவாய் வழியாக 18,600 உயரத்தில் இந்த சாலை செல்கிறது. இனி இதுவே பொது வாகனப் பயன்பாட்டுக்குரிய உலகின்மிக உயரமான சாலையாக இருக்கும். வருங்காலத்தில் உள்ளூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்த சாலை முக்கியப்பங்கு வகிக்கும். குறிப்பாக லடாக்கின் லலோக் பிராந்தியத்தில் சுற்றுலா மேம்படும் என்பதால் அப்பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு இந்த சாலை வழிவகுக்கும்.
உலகின் மிக உயரமான சாலைமற்றும் அரிய மருத்துவத் தாவரங்களை சுற்றுலாப் பயணிகள் காணலாம். பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம். நாடோடி கால்நடைகள், ஏரிகள் மற்றும் பிற அழகிய இடங்களை அவர்கள் பார்க்கலாம்” என்றார்.
இந்த சாலையை கட்டமைத்த ராணுவ பொறியாளர் பிரிவை அவர்பாராட்டினார். எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசின் தீவிரத்தை அவர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், 14-ம் படைப்பிரிவு கமாண்டிங் அதிகாரி தஷி நம்கயால் யாக்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.-பிடிஐ