Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளம் தொடக்கம்; காஷ்மீர் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

ஜம்மு காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளத்தைமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார். பல்வேறு தொழில் நடவடிக்கைகள் மூலம் இம்மாநிலத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்து சேரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான சாதக அம்சங்களைக் கொண்ட தொழில் கொள்கை தற்போது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே உள்ளது என்று காணொலி வாயிலாக இணையதளத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் குறிப்பிட்டார். புதியஇணையதளத்தைத் தொடங்கி வைத்து அவர் மேலும் கூறியதாவது:

சுற்றுலா, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஊக்க சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், இத்துறை சார்ந்த பிற தொழில்களும் வளர்ச்சியடையும். இதன் மூலம் தொழில் புரிவதற்கேற்ற சூழல் இங்கு உருவாகும். இம்மாநிலத்தில் கடந்த காலங்களில் நிலவி வந்தஅரசியல் அமைப்பு சட்டத்தின் 370மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகள் தொழில் வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. இப்போதுஇவை நீக்கப்பட்டுவிட்டன. இதன்மூலம் 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது

2015-ம் ஆண்டு நகரில் ரூ.80,068 கோடிக்கான சலுகை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை, உஜ்வாலா, டிபிடி, சௌபாக்யா உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களும் ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டன. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படும். இது பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ஜம்முவில் தற்போது சுற்றுலாப் பயணிகள் வரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட முந்தைய அரசுகள் செயல்படுத்தவில்லை. வீட்டு வசதி, கழிப்பறை, மின் விநியோகம் உள்ளிட்டவை கடந்தமூன்று ஆண்டுகளில் பிரதமர்மோடியால் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார் அமித் ஷா.

இந்நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பிரதமர் அலுவலகஇணை அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், வர்த்தகத்துறை இணை அமைச்சர்கள் சோம் பிரகாஷ், அனுபிரியா படேல் மற்றும் காஷ்மீர் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெளிப்படையான கொள்கை மற்றும் அதிக ஊக்க சலுகை உள்ளிட்ட காரணங்களால் அதிகமுதலீடுகள் வர வாய்ப்புள்ளது என்று அமைச்சர் பியுஷ் கோயல்குறிப்பிட்டார். தொழில் தொடங்குவதற்கு பதிவு செய்தல், பரிசீலனைஉள்ளிட்ட அனைத்துமே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. எவ்வித மனித குறுக்கீடும் கிடையாது என்றார்.

ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி ரூ.28,400 கோடியாகும். ஊக்க சலுகை, மூலதன சலுகை, மூலதன வட்டி தள்ளுபடி, ஜிஎஸ்டி சலுகை உள்ளிட்டவை இதில் அடங்கும். இதன் மூலம் புதிதாக 78 ஆயிரம் நேரடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x