

கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 3-ம் தேதி டெல்லி வந்திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய 65 பக்க மனுவை அளித்தார். அதில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் வரையறைக் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு பிரதமரைச் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை டெல்லி வந்தார். அங்கு கர்நாடக பவனில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார், ஜி.எம்.சித்தேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமரிடம் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமருடன் சந்திப்பு
முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கர்நாடக கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பு முடிந்து வெளியில் வந்த முதல்வர் சித்தராமையா, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த நடவடிக்கையை தொடரக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளோம். இரண்டு மாநில மக்களும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்’ என்றார்.
காவிரி நீரில் தமிழகம் 419 டிஎம்சி, கர்நாடகம் 270 டிஎம்சி, கேரளம் 30 டிஎம்சி, புதுச்சேரி 7 டிஎம்சி நீர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.