

பிரதமர் மோடியின் ஆட்சியில் இரு விஷயங்கள்தான் வளர்ச்சி அடைகின்றன என்று சமையல் காஸ் சிலிண்டர் உயர்வுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், எம்.பி. ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விலை உயர்த்தப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்குள் 2-வது முறையாக சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தகரீதியான சிலிண்டர் விலையும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,693 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் காஸ் சிலிண்டர் விலை ரூ.834 ஆக இருந்த நிலையில் இப்போது ரூ.884 அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.190 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சமையல் சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.410.50 ஆக இருந்த நிலையில் தற்போது, ரூ.884 ஆக அதிகரித்துள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “பிரதமரே! உங்கள் ஆட்சியில் இரு வகையான வளர்ச்சி மட்டுமே இருக்கிறது. உங்களின் கோடீஸ்வர நண்பர்களின் வருவாய் அதிகரித்து வருகிறது.
மற்றொரு புறம், சாமானிய மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதுதான் வளர்ச்சி என்றால், இந்த வளர்ச்சிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பொதுமக்களை வெறும் வயிற்றுடன் தூங்கக் கட்டாயப்படுத்தும் அந்த ஒருவர்தான், தனது கோடீஸ்வர நண்பர்களின் நிழலில் ஓய்வெடுக்கிறார். இப்போது, இந்த தேசம், அநீதிக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பொது பட்ஜெட்டில் கொள்ளையடிப்பதுதான் பாஜகவுக்கு நல்ல காலம். கடந்த 2014 மார்ச் 1-ம் தேதி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் காஸ் சிலிண்டர் விலை ரூ.410. ஆனால், 2021, செப்டம்பர் 1-ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சிலிண்டர் விலை ரூ.884. கடந்த 7 ஆண்டுகளில் சிலிண்டர் விலை இரட்டிப்பாகியுள்ளது. இதுதான் மோடிஜியின் நல்ல காலம் வரும் என்ற வாக்குறுதி” எனத் தெரிவித்துள்ளார்.