

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கின் அஞ்சலிக் கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதற்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் தலைவர்கள் செல்லாததன் பின்னணியில் முஸ்லிம் வாக்குகள் இடம்பெற்றதாகக் கருதப்படுகிறது.
பாஜகவின் மூத்த தலைவரும் ராஜஸ்தான், இமாச்சாலப்பிரதேசத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண்சிங் கடந்த ஆகஸ்ட் 21 இல் காலமானார். அவருக்கான அஞ்சலிக் கூட்டம் நேற்று பாஜக சார்பில் லக்னோவில் நடைபெற்றது.
இதற்காக, அம்மாநில பாஜகவின் சார்பில் பல முக்கியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவின் மாநில தலைவரான சுதந்திரா தேவ்சிங் சமாஜ்வாதி நிறுவனம் முலாயம்சிங், அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவிற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
இதுபோல், எதிர்கட்சிகளின் முக்கிய தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், அவர் தனது பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளரான சதீஷ்சந்திர மிஸ்ராவை அனுப்பி வைத்திருந்தார்.
எனினும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் சார்பில் எவரும் அஞ்சலிக் கூட்டத்திற்கு வரவில்லை. இதன் பின்னணியில் முஸ்லிம்களின் வாக்குகள் பெறுவதன் நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இவர்கள் கல்யாண்சிங்கின் மறைவின் போது அவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை. அப்போதும் அடுத்த வருடம் உ.பி.யின் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் மீதான இதே புகார் எழுந்திருந்தது.
இங்குள்ள அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992 இல் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அப்போது
அம்மாநில முதல்வராக இருந்த கல்யாண்சிங்கும் அதன் முக்கியக் காரணம் எனப் புகார் உள்ளது.
இதன் காரணமாக உ.பி.யின் முஸ்லிம்கள் கல்யாண்சிங்கை ஆதரித்ததில்லை. இவர் இடையில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்த போது முலாயம்சிங்கிற்கு முஸ்லிம்கள் வாக்களிக்காமல் அவர் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நழுவியிருந்தது.
இச்சுழலில் மீண்டும் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து சமாஜ்வாதியிலிருந்து எவரும் கல்யாண்சிங் அஞ்சலிக் கூட்டத்திற்கும் செல்லவில்லை எனக் கருதப்படுகிறது.
அதேசமயம், பாஜகவும் கல்யாண்சிங்கை மீண்டும் முன்னிறுத்தி அரசியல் செய்வதாகத் தெரிகிறது. இதற்கு அவரது தலைமையிலான ஆட்சியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது காரணம் எனவும் கருதப்படுகிறது.
உபியில் மொத்தமுள்ள 404 சட்டப்பேரவை தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் நிலை இருப்பதும் நினைவுகூரத்தக்கது.