காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்  | கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் | கோப்புப்படம்

சீனா, பாக். தொடர்புக்கு சாத்தியமுள்ள தலிபான் ஆப்கன் கவலைக்குரியது: ப.சிதம்பரம்

Published on

சீனா, பாகிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கன் கவலைக்குரியதுதான். ஆப்கானிஸ்தான் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக நம்மை நாமே பாராட்டுவது முதிர்ச்சியற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின், அங்கிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது என்றும், அங்கிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிப்பது, மனிதநேய உதவிகளை வழங்குவது, மனித உரிமைகளை உறுதி செய்வது, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உரிமைகளைக் காப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா ,சீனா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “ ஆப்கானிஸ்தான் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது.

ஆனால், தீர்மானம் இரு அர்த்தங்களை உணர்த்துகிறது. முதலாவது, இந்த விஷயம், இந்தியாவின் மனநிறைவுக்காகத் தீர்க்கப்பட்டுள்ளது அல்லது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு கவுன்சலில் அது நடக்கவில்லை.

2-வது அர்த்தம், நம்முடைய விருப்பங்களைக் காகிதத்தில் தெரிவித்தோம். அந்தக் காகிதத்தில் சிலரும் கையெழுத்திட்டுள்ளார்கள். இதுதான் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்தது. ஆதலால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வது முதிர்ச்சியற்றது.

சீனா, பாகிஸ்தான் தொடர்புடைய தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கன் கவலைக்குரியதுதான்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in