30 லட்சம் இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்
2021, ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதி வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, 594 புகார்கள் வந்துள்ளன என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் கடந்த மே மாதம் நடைமுறைக்கு வந்தபின், 2-வது முறையாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிக்கை வெளியிடுகிறது.
வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதிவரை இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் அனைத்தும் +91 என்ற செல்போன் எண்ணில் தொடங்கும். அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாகவே 95 சதவீதக் கணக்குகள் முடக்கப்பட்டன.
ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதி வரை 594 புகார்கள் வந்தன. இதில் கணக்குகளை முடக்கக் கோரியும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தக் கோரியும் பல புகார்கள் வந்தன. இந்த புகார்கள் வந்த காலத்திலேயே 74 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வாட்ஸ் அப் நிறுவனம் பெற்ற புகார்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தவறுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ் அப் நிறுவனம் கணக்குகளைத் தடை செய்தபின், அந்தக் கணக்கின் உரிமையாளர்கள் வாட்ஸ் அப் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மீண்டும் தங்கள் கணக்கை மீட்க முயன்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
