மேகேதாட்டு,குண்டாறு இணைப்பு திட்டம் பேசப்படவில்லை; தமிழகத்துக்கு 30.6 டிஎம்சி தண்ணீர்: உடனடியாக திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

மேகேதாட்டு,குண்டாறு இணைப்பு திட்டம் பேசப்படவில்லை; தமிழகத்துக்கு 30.6 டிஎம்சி தண்ணீர்: உடனடியாக திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

காவிரியில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 30.6 டிஎம்சி நீரை உடனடியாக வழங்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேகேதாட்டு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ப‌ங்கேற்றனர்.

கூட்டத்தில் கர்நாடக அரசின் சார்பில், மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் எதிர்ப்புதெரிவித்த‌னர். தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் சந்தீப்சக்சேனா பேசும்போது, “மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்கக் கோரி தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுஉச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதுபற்றி பேசக் கூடாது. மேலும்ஆணைய கூட்டங்களில் 4 மாநிலங்களும் ஏற்கும் விஷயத்தைப் பற்றிமட்டுமே விவாதிக்க வேண்டும்''என்றார்.

இதையடுத்து மேகேதாட்டு மற்றும் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் 86.6 டிஎம்சி நீரை திறந்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 30 நிலவரப்படி 56 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. எனவே மீதமுள்ள 30.6 டிஎம்சி நீரையும், செப்டம்பர் மாதத்தில் வழங்க வேண்டிய நீரையும் சேர்த்து தமிழகத்துக்கு உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு தரப்பில், “தமிழகத்துக்கு கடந்த 30-ம் தேதி கூட விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் 209 டிஎம்சி நீர் இருப்பு இருக்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு மழை அளவு குறைந்ததால், தற்போது 156 டிஎம்சி நீர் மட்டுமேஇருக்கிறது'' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், ''தமிழகத்துக்கு வழங்க வேண்டியதில் நிலுவையில் உள்ள 30.6 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல செப்டம்பர் மாதத்தில் வழங்க வேண்டிய நீரையும் முறையாக திறந்துவிட வேண்டும். அடுத்தக் கூட்டம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறும். அப்போது 4 மாநிலங்களிடையே ஏற்படும் ஒருமித்த கருத்து குறித்து விவாதிக்கப்படும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in