Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

பெங்களூருவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு

பெங்களூரு

பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில், ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர், 3 இளம்பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் (25). இவர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். அங்கு நண்பர்கள் ரோஹித் (25), உத்சவ் (25), தனுஷ் (20) ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் சென்று தனது உறவினரின் மகள் பிந்து (28), அவரது தோழிகள் இஷிதா (21), அக் ஷயா கோயல் (25) ஆகியோரையும் சந்தித்தார்.

இரவு 9.30 மணிக்கு தனது தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்ட கருணா சாகர், நண்பர்களுடன் இரவு உணவு உட்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, 7 பேரும் கோரமங்களாவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இரவு உணவை அருந்தியுள்ளனர். அதன் பிறகு, ‘ஆடி க்யூ 3’ காரில் எம்ஜி சாலை, பிரிகேட் சாலை ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ளனர்.

பெங்களூருவில் கரோனா பரவல் தடுப்புக்காக இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், இரவு 11.50 மணிக்கு ஆடுகோடி அருகே போலீஸார் காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது கருணா சாகர்,'ஒசூர் எம்எல்ஏவின் மகன்' எனக் கூறியதால், வீட்டுக்கு செல்லுமாறு போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இருப்பினும், கருணா சாகர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் காரில் வேகமாக சுற்றியுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் கோரமங்களா சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையின் தூண்கள் மீது வேகமாக மோதி, பின்னர் அதை ஒட்டியிருந்த‌ பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவர் மீது இடித்து விபத்துக்குள்ளான‌து.

இந்த விபத்தில் காரில் இருந்த கருணாசாகர், 3 பெண்கள் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆடுகோடி போலீஸார் 7 பேரின் உடல்களையும் மீட்டு,செயின்ட் ஜான்ஸ் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலையில் பிரேத பரிசோ தனைக்கு பிறகு கருணாசாகரின் உடல் அவரது தந்தை ஒய்.பிரகாஷிடன் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்துக் குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் ரவிகாந்த கவுடா கூறும்போது,'' கவனக் குறைவு மற்றும் அதிவேகமாக கார் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

4 பிரிவுகளில் வழக்கு

இதுகுறித்து ஆடுகோடி போலீஸார் கரோனா விதிமுறை மீறல், அலட்சியமாக வாகனம் இயக்குதல் உள்ளிட்ட‌ 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் உள்ளிட்ட மற்றவர்கள் மது போதையில் இருந்தார்களா என்பது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த‌ பிறகே கூற முடியும். காரில் பயணித்த அனைவ‌ரும் சீட் பெல்ட் அணியாததால், வேகமாக மோதிய உடன் ஏர் பலூன் திறக்கவில்லை" என்றார்.

ஓய்.பிரகாஷின் மனைவி சிவம்மா, கடந்த ஏப்ரலில் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், தற்போது அவரது மகன் கருணாசாகர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த கிராமத்தில் உடல் அடக்கம்

விபத்தில் இறந்த ஒய்.பிரகாஷ் எம்எல்ஏவின் மகன் கருணாசாகரின் உடல் அவரது சொந்த ஊரான பேளகொண்டப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி, எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், அணைக்கட்டு நந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பேளகொண்டப்பள்ளியில் உள்ள ஒய்.பிரகாஷின் தோட்டத்திலேயே கருணாசாகரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x