

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல், கரோனா 2-ம் அலையால் இலவச தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
இதனால், சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூ.300 சிறப்பு தரிசனம் மட்டும் 2-ம் அலையிலும் இதுவரை நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று, விஐபி தரிசனங்களுக்கு சிபாரிசு கடிதங்கள் மூலம் தடையின்றி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் வரை ரூ.300 சிறப்பு ஆன்லைன் டோக்கன்கள், விஐபி பிரேக், கல்யாண உற்சவ டிக்கெட், மற்றும் ஒரு டிக்கெட் ரூ.10,500-க்கு வாணி அறக்கட்டளை டிக்கெட் மூலம் சுவாமியை தரிசித்து வரு கின்றனர்.
இதேபோன்று, கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும், அவர்கள் ஆன்லைனில் ரூ.1000 செலுத்தி, 2 பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் சுவாமியை ரூ.300 வரிசையில் சென்று தரிசித்து செல்லலாம். இப்படி பணம் செலுத்திய பக்தர்கள் மட்டுமே தற்போது ஏழுமலையானை தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று சாமானிய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயண் கூட, இலவச தரிசனத்தை இத்தனை நாட்கள் நிறுத்துவது தவறு, தினமும் 1000 டிக்கெட்டுகளையாவது வழங்குங்கள் என தேவஸ்தானஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா லும் இதுவரை அதனை தேவஸ்தான அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இலவச தரிசன டோக்கன்வழங்கினால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியாது. இதனால் கரோனா பரவும் என தேவஸ்தானம் சார்பில் கூறுகின்றனர்.
மேலும், சர்வ தரிசன டோக்கன் வழங்கினால், வரப்போகும் புரட்டாசி மாதத்தில் தமிழக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருப்பதிக்கு வந்தால் கரோனா பரவும் என்றும் தெரிவிக்கின்றனர். எனினும், பக்தர்களின் கோரிக்கை குறித்து 2 அல்லது 3 நாட்களில் முடிவெடுக்கப்படும் என திரு மலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியுள்ளார்.