

சபரிமலை ஐயப்பன் கோயிலுக் குள் செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். ஆனால் மாதவிலக்கை காரணம் காட்டி பெண்களை அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக் குள் செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது. இந்தத் தடையை நீக்கி அனைத்து பெண்களும் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அரசியல் சாசன சட்டப்படி கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியது. அத்துடன் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு கடந்த மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது.
இதன்படி கேரள அரசு தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் பதில் மனுவை நீதிமன் றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் “திருவாங்கூர்-கொச்சி இந்து சமய அமைப்புகள் சட்டம் 1950-ன்படி, ஐயப்பன் கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் கவனித்து வருகிறது. இந்த சட்டத்தின்படி, ஐயப்பன் கோயிலின் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கோயிலுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து வாரியமே முடிவு எடுக்கும்.
எனவே, மத நம்பிக்கை தொடர்பான இந்த விவகாரத்தில் அந்த வாரிய மதகுருக்களின் முடிவே இறுதியானது” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.