ஆயுர்வேத சிகிச்சைக்காக ஜாமீன் கோரிய அசாராம் பாபு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஆயுர்வேத சிகிச்சைக்காக ஜாமீன் கோரிய அசாராம் பாபு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் கண்டனம்
Updated on
2 min read

சாமியார் அசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீங்கள் ஒன்றும் சாதாரண குற்றத்துக்காக சிறையில் இல்லை. அதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான ஆயுர்வேத சிகிச்சை சிறையிலேயே கிடைக்கும். உங்களுக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்று கடுமையாக விமர்சித்தது.

16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் உத்தரகாண்டில் ஆயுர்வேத சிகிச்சை செய்துகொள்வதற்காக அவர் ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் அசாராம் பாபு சிகிச்சை என்ற போர்வையில் தண்டனையில் இருந்து தப்பிக்க நினைப்பதாகக் கூறினார். அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் அசாராமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என்று முறையிட்டார். அசாராமுக்கு ஜாமீன் வழங்கினால் தங்களின் குடும்பத்தார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறினார்.

வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அசாராம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்துள்ளது.

யார் இந்த சாராம் பாபு?

1970களில் சபர்மதி ஆற்றங்கரையில் சாதாரண குடிசையில் தனது ஆசிரமத்தைக் கட்டமைத்து, எளிமையாக தொடங்கிய ஆசாராம் பாபுவின் வாழ்க்கை அடுத்த 40 ஆண்டுகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களுக்கு அதிபதியாக்கிவிட்டது. கோடிகளில் புரண்டு, வாழும் காஸ்ட்லியான சாமியாராகிவிட்டார் அசாராம் பாபு.

பிரிக்கப்படாத இந்தியாவில் தற்போது பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள பெரானி கிராமத்தில் கடந்த 1941-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி பிறந்தவர் ஆசாராம் பாபு. இவரின் இயற்பெயர் அசாராம் பாபு இல்லை, அன்சுமால் துமால் ஹர்பலானி. ஆசாராம் பாபு அகமதாபாத்தில் உள்ள ஜெய்ஹிந்த் உயர்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்புவரை மட்டுமே படித்தார்.

தன்னுடைய 15-வது வயதில் லட்சுமி என்ற பெண்ணுடன் அசாராம் பாபுவுக்கு திருமணமானது. இவருக்கு நாராயண் சாய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கைக்குபின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் இயமலைக்கு சென்றார். அங்கு லீலாஷா பாபு என்ற துறவி கடந்த 1964-ம் ஆண்டு, அக்டோபர் 7-ம் தேதி அன்சுமால் துமால் ஹர்பலானிக்கு தீட்சை அளித்து , அசாராம் பாபு என்ற பெயரை வழங்கினார். அன்று முதல் தனது அன்சுமால் துமால் ஹர்பலானி என்ற இயற்பெயரை மறைத்து அசாராம் பாபு என்ற பெயரில் வாழத் தொடங்கினார்.

கடந்த 2013-ம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூர் ஆஸிரமத்தில் 16வயது மைனர் சிறுமியை ஆசிராம் பாபு பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. இவர் மீது கொலை, பலாத்காரம் எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஜோத்பூர் சிறுமி வழக்கில் சாட்சி சொன்ன 9 பேரில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மீதமுள்ள 6 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in