

கரோனா பரவல் காரணமாகவே உறியடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மக்கள் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இதை அறிவித்ததே மத்திய அரசு தான், போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டும் பாஜகவினரிடம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை காட்ட தயாராக இருக்கிறோம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இந்தியாவில் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அண்மை காலமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனையடுத்து கரோனா பரவலை கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளா மற்றும் மகாராஷ்டிரா அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.
அக்கடிதத்தில், ‘‘நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கண்காணிக்க வேண்டும். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கரோனோ தடுப்பூசியை முழு வீச்சில் விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதுதவிர தனிமனித இடைவெளியையும் முக கவசம் அணிந்து வெளியே செல்ல அறிவுறுத்த வேண்டும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விரைந்து அதிகப்படுத்துமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து மகாராஷ்டிராவில் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோலவே செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடபடுகிறது. கரோனா பரவல் காரணமாக திருவிழா கொண்டாட்டத்துக்கு மகாராஷ்டிர அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் பாஜக எச்சரித்துள்ளது. இதற்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. எனவே கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மூன்றாவது அலை வரக்கூடும் என மத்திய அரசும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு மத்திய அரசு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.
எனவே தான் உறியடி திருவிழா மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என நாங்கள் அறிவித்துள்ளோம். ஆனால் மகாராஷ்டிர அரசைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்துகிறது. போராட்டம் நடத்தும் பாஜகவினரிடம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை காட்டுகிறோம்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.