

இரண்டு அடுக்கு ஜீன்ஸ் பேன்ட்-க்கு இடையில் தங்கத்தை பசையாக பூசி, நூதன முறையில் கடத்தி வந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் பயணிகளிடம் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான பயணி ஒருவரை சோதனையிட்டனர். இதில் அவர் 2 லேயர் துணியால் தைக்கப்பட்டிருந்த ஜீன்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த ஜீன்ஸில் ஒரு துணிக்கும் மற்றொரு துணிக்கும் இடையில் தங்கத்தை பசையாக பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பெயின்ட் பூசியது போல ஜீன்ஸ் துணியின் நீளம் முழுவதும் மெல்லிய லேயரில் தங்கம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். தங்கத்தை நகைகளாகவும் பிஸ்கட்களாகவும் பறிமுதல் செய்து வந்த அதிகாரிகள் இந்த முறை பேஸ்ட் வடிவில் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 302 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.