Last Updated : 31 Aug, 2021 03:12 AM

 

Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

தந்தை வழியில் தலைமை நீதிபதி ஆகப் போகும் பி.வி.நாகரத்னா: நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை கிடைக்கும்

பெங்களூரு

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதி பி.வி.நாகரத்னா ‘இந்தியா வின் முதல் பெண் தலைமை நீதி பதி’ எனும் பெருமையை பெற இருக்கிறார். இதனால் அவரது உறவினர்களும் சக பெண் வழக்கறிஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவரான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு வரும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் நீதிபதி பி.வி.நாகரத்னா. அவரது தந்தை இ.எஸ்.வெங்கடராமையா 1989-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார்.

பெங்களூருவில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய வெங்கடராமையாவுக்கு நீதித்துறை மீது அளவற்ற காதல். தன் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அந்த துறையில் நுழைத்து தனது ஆர்வத்தை தணித்துக் கொண்டார்.

தனது சகோதரர் இ.எஸ்.சீதாராமையா, அவரது மகன் இ.எஸ்.இந்திரேஷ் ஆகியோரை முதலில் வழக்கறிஞர் ஆக்கினார். பின்னர் இ.எஸ்.இந்திரேஷ் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார்.

இ.எஸ்.வெங்கடராமையா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபோது ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான முதல்கன்னடர்’ என்ற பெருமையை பெற்றார். அவரது வழியில் மகள்பி.வி.நாகரத்னா ‘இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி’ எனும் பெருமையை பெற இருப்பதால் ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம்தேதி பிறந்த பி.வி.நாகரத்னா பெங்களூருவில் சோஃபியா பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்தார். டெல்லி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த இவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் சட்ட வாழ்க்கையை தொடங்கினார். அரசியலமைப்பு சட்டம், வருமான வரி சட்டம், நிர்வாக சட்டம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் ஆஜரான இவர், தனது திறமையான வாதத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.

2008-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2010-ம்ஆண்டு நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு கர்நாடக தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரனுக்கு எதிராகவழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலேயே போராடியதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றினார். கன்னட அமைப்புகளும், வழக்கறிஞர்களும் நீதிபதி பி.டி.தினகரனுக்கு எதிராக திரும்பிய போதும், இவர் சட்டத்தின் பக்கம் நின்றார்.

2012-ம் ஆண்டு மின்னணு ஊடகங்கள் தொடர்பான ஒரு வழக்கில், “உண்மையான செய்தியை ஒளிப்பரப்புவது அவசியமானதாக இருந்தாலும், தொலைக்காட்சிகள் முதல்கட்ட தகவலைவைத்தே பரபரப்பை ஏற்படுத்தக்கூடாது. பிரேக்கிங் நியூஸ், ஃப்ளாஷ் நியூஸ் என செய்திகள் போடுவதை கட்டுப்படுத்த தனிக் குழு உருவாக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x