

தேசிய அளவில் கரோனா குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் கேரள அரசுப் பணியாளரின் செயல் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸால் கவுர விக்கப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறையில் இளநிலை எழுத்தராக பணிபுரிபவர் கிருஷ்ண பிரசாத்(40). எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா குறித்த புள்ளிவிவரங்களை பொழுதுபோக்காக சேகரிக்க தொடங்கினார். ஆனால், அதுவேஇப்போது நாடெங்கிலும் உள்ள மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் அனைவராலும் கவனிக்கப் படக்கூடிய விஷயமாக மாறியுள் ளது. இவரது கரோனா குறித்த தரவு சேகரிப்புகளுக்காகவே, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ண பிரசாத், இந்து தமிழ்திசையிடம் கூறியதாவது:
ஆரம்பத்தில் பொழுதுபோக் காகவே முகநூலில் கரோனா குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டேன். இதுவரை 10,800 பதிவுகளை வெளியிட்டி ருக்கிறேன். மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு காரணம்.
எனது பக்கத்தில் கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் பலியானவர்களின் விவரங்கள், இந்தியா முழுவதும் தினமும் தடுப்பூசி போடப்படும் இடங்கள், மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, படுக்கை இருப்பு, நேர்மறை செய்திகள் என அனைத்து தகவலும் இருக்கும். கேரளத்தோடு மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கரோனா தகவல்களும் அதில் இருக்கும். கரோனா குறித்த எந்த கேள்விக்கும் விடைசொல்லும் களமாகவும் அதை செயல்படுத்தினேன். இது எல்லாம் சேர்த்து இன்று என் முகநூல் பக்கத்தை லட்சத்துக்கும் அதிகமானோரை பின்தொடர வைத்துள்ளது.
அலுவலகப் பணி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்ததும், முகநூல் பக்கத்தில் பதிவிடும் பணியை செய்வேன். பல இரவுகள் இதற்காக தூங்காமல் இருந்திருக்கிறேன். இந்தியா, வெளிநாட்டில் வாழும் இந்திய மருத்துவ நிபுணர்களும் என் தரவுகளைப் பார்த்துவிட்டு ஊக்குவித்தனர். இதன் மூலம் எனக்கு எந்த பணப் பலனும் கிடைக்கவில்லை. ஆனால் சமூகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமையாகவே இதனை பார்க்கிறேன்.
நான் தொடர்ந்து பல மருத்துவ இதழ்கள், நிபுணர்களின் பக்கங்கள், அரசின் சுகாதாரத்துறை பக்கங்களில் இருந்து எடுக்கும் தரவுகள் என பலகட்ட ஆய்வுக்கும், உறுதிப்படுத்தலுக்கும் பின்பே என் பக்கத்தில் பகிர்ந்து வருகிறேன். இந்தப்பணிகளுக்காக இந்தியன் புக் ஆப்ரெக்கார்ட்ஸ் என்னை கவுரவித் துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.