பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
1 min read

சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கடந்த 1965, 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது. போரில் இந்தியாவை எதிர்கொள்ள முடியாது என்பதால் மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அனைத்து சதிகளையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படுகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை தீவிரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பதால் காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்திய, சீன எல்லை தொடர்பான உடன்பாடுகளை சீனா மீறியதால்தான் கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் பிரச்சினைகள் எழுந்தன. லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையால் பாதுகாப்பு பிரச்சினைகள் எழுந்திருப்பது உண்மைதான். நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in