

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் பார்வையற்ற 7 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் பகவத் கீதையை மனப்பாடமாக சொல்கிறார்.
ரிடா ஜெரா என்ற இந்த சிறுமி, மீரட் நகரில் பார்வையற்றவர்களுக்கான உறைவிடப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். 80 சதவீத பார்வை குறைபாட்டுடன் பிறந்த இச்சிறுமி இதுவரை பக்வத் கீதையை பார்த்ததில்லை. பிரெய்லி முறையிலும் அதை படிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு கீதையை வாசித்து மனப்பாடம் செய்ய அவரது ஆசிரியர் உதவியுள்ளார்.
ஜெராவின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் டெல்லி அருகே லோகியா நகரில் வசிக்கின்றனர். கோடை மற்றும் விழாக் காலங்களில் ரிடா அங்கு சென்று வருகிறார். ரிடாவின் 3-வது வயதில் அவரை அவரது தந்தை இப்பள்ளியில் சேர்த்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரவீன் சர்மா கூறும்போது, “மீரட் நகரில் குழந்தைகளுக்கான பகவத் கீதை போட்டி நடப்பது கடந்த ஆண்டு தொடக்கத்தில்தான் எனக்கு தெரியவந்தது. அப்போதுதான் நமது குழந்தைகள் இதில் ஏன் பங்கேற்க கூடாது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதில் பற்கேற்பதற்காக ரிடா விரைவாக கற்றுத் தேறினாள்” என்றார்.