

மாணவர்களின் குரல் வளையை மத்திய அரசு நெறிக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியில் ராகுல் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது கோபூர், பிபுரியா, திதாபோர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், முக்கிய கல்வி அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம், ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளில் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
பேச்சுரிமை, கருத்துரிமைக்காகப் போராடும் மாணவர்களின் குரல்வளையை மத்திய அரசு நெறிக்கிறது. நீதிக்காக போராடும் செய்தியாளர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தபிறகு பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.