

உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்ய நாத்தை அறிவிக்க வேண்டும் என ‘தர்ம ஜாக்ரன் விவாஹ்’ என்ற சாதுக் கள் சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் கோரக்பூரில் நடந்த 3 நாள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)-ன் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரனில் 2000 சாதுக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டத்தில் ஆதித்யநாத் பெயரை பாரதிய சாதுக்கள் சபையின் மஹந்த் சுரேஷ் மஹராஜ் முன் மொழிந்தார். இதன் மீது நடந்த குரல் வாக்கெடுப்பில் அனைத்து சாதுக்களும் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “சமாஜ்வாதி கட்சி யின் இளம் முதல்வர் அகிலேஷ் யாதவை சமாளிக்கும் வகையில் பாஜகவிலும் ஒருவர் முன்னிறுத் தப்படுவது அவசியம். இதற்கு பொருத்தமானவராக 43 வயது யோகி ஆதித்யநாத் இருப்பார். ாதுக்களின் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆதரவுடன் பாஜக வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது” என்று தெரிவித்தனர்.
மக்களவையின் 26 வயது இளம் எம்.பி.யாக உ.பி.யின் கோரக்பூர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் 1998-ல் யோகி ஆதித்யநாத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் தற்போது 5-வது முறையாக இத்தொகுதி எம்.பி.யாக தொடர்கிறார். சர்ச் சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர் போனவர் இவர். பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினம் அறிவித்த போது, “இதை ஏற்காதவர்கள் பாகிஸ்தான் சென்று விட வேண் டும்” என்று ஆதித்யநாத் கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டப்படுவதையும் அடிக்கடி வலியுறுத்தி வரும் ஆதித்யநாத், பாஜக சார்பில் உ.பி. முதல்வர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்பது சாதுக்களின் கருத்து.
பாஜக சார்பில் உ.பி. முதல்வர் வேட்பாளர் பட்டியலில், இம்மாநில முன்னாள் முதல்வரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், ம.பி. முன்னாள் முதல் வரும் மத்திய நீர்வளத் துறை அமைச்சருமான உமா பாரதி, சுல்தான்பூர் தொகுதி எம்.பி. வருண் காந்தி, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, பஜ்ரங்தளம் அமைப்பின் தலைவர் வினய் கட்டியார் ஆகியோரின் பெயர் களும் உள்ளன.
மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களில் முதல்வர் வேட்பாளரை அறி விப்பது வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அரசியல் கட்சிகள் கருது கின்றன.
அந்த வகையில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாஜக, முதல்வர் வேட்பாளரை அறிவிக்கிறது. ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதல்வர் வேட் பாளர்களை அறிவித்து பாஜக வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஹரியாணா, மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர்களை பாஜக அறிவிக்கவில்லை. என்றாலும் தேர்தலுக்கு பின் இங்கு பாஜக முதல்வர்கள் பதவியேற்றனர்.
டெல்லி முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியை அறிவித்து, பாஜக தோல்வி கண்டது. இந்நிலையில் அசாம் சட்டப்பேரவை தேர்தலை யொட்டி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் அம்மாநில முதல்வர் வேட்பாளராக சர்பானந்தா சோனோவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.