

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கே அவமானமாகும், இதுபோன்ற தாக்குதல்கள், தலிபான்களின் மனநிலையாக உள்ளது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லியின் புறநகரில் உள்ள பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 12 சுற்றுப் பேச்சு மத்தியஅரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடந்தும் எந்தத்தீர்வும் எட்டவில்லை.
இந்தநிலையில் ஹரியாணா மாநிலம் கர்ணல் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், பல விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:
ஹரியாணா எல்லையில் விவசாயிகள் 2 ஆண்டுகளாக தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர்.
இந்த அரசு எப்படி, ஏழைகளுக்கான அரசு அல்லது விவசாயிகளுக்கான அரசு என்று கூறிக்கொள்ள முடியும். விவசாயிகளின் குரலை மத்திய அரசு காது கொடுத்து கூட கேட்கவில்லை. இந்தநிலையில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கே அவமானமாகும். இதுபோன்ற தாக்குதல்கள், தலிபான்களின் மனநிலையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.