மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு: எம்எல்ஏ தன்மய் கோஷ் திரிணமூல் காங்கிரஸுக்கு தாவல் 

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு: எம்எல்ஏ தன்மய் கோஷ் திரிணமூல் காங்கிரஸுக்கு தாவல் 
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலத்தில் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பிஷ்ணுபூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இன்று சேர்ந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை கூறப்பட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.

இந்தநிலையில் மேற்குவங்க பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அந்த கட்சியின் தற்போதைய எம்எல்ஏ இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மேற்குவங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பங்குரா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் தொகுதியில் வெற்றி பெற்ற தன்மய் கோஷ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக பலம் திங்களன்று 73 ஆகக் குறைந்தது.

கோஷ் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவாரா என்று நேரடியாக பதிலளிக்கவில்லை. எனினும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கல்வி அமைச்சருமான ரத்யா பாசு, "எல்லாம் விதிகளின்படி நடக்கும்" என்றார்.

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தது பற்றி தன்மய் கோஷ் கூறியதாவது:

அனைத்து கட்சிகளிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பணியாற்ற திரிணமூல் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

மகத்தான வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த இந்த முடிவு எடுத்தேன். மம்தாவின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறன் என்னை அந்த கட்சியை நோக்கி ஈர்த்தது"என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in