

உத்தரப்பிரதேச, ஆக்ராவில் தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்ட ரவுடி என்கவுன்டரில் பலியாகி உள்ளார். அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான(எஸ்எஸ்பி) தமிழர் ஜி.முனிராஜ் தலைமையில் இச்சம்பவம் நடைபெற்றது.
ராஜஸ்தானின் தோல்பூரை சேர்ந்தவர் முகேஷ் தாக்கூர். கடந்த 2014 முதல் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர் ராஜஸ்தானில் மூன்று கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அடைந்தார்.
சிறையிலிருந்து பரோலில் வந்தவர் தலைமறைவாகி வங்கிக்கொள்ளை, பணத்திற்காக ஆட்களை கொல்வதில் இறங்கினார். தோல்பூருக்கு அருகிலுள்ள ஆக்ராவின் இர்தத் நகரின் கனரா வங்கியில் பிப்ரவடி 15 இல் கொள்ளை அடித்தார்.
ஆக்ராவில் பணத்திற்காக ஒரு முக்கிய தலைவரை கொல்ல முயன்றார். கடைசியாக, ஆக்ராவின் ஒரு பெட்ரோல் பம்பில் கொள்ளையடித்து அதன் காவலர்களிடமிருந்து துப்பாக்கிகளை பறித்துச் சென்றார் முகேஷ்.
இதுபோன்ற வழக்குகளால் முகேஷ் தாக்கூர் பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக்ராவின் எஸ் எஸ்பியான ஜி.முனிராஜ்.ஐபிஎஸ் நேரடி கண்காணிப்பில் ஒரு தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்தது.
இச்சூழலில் நேற்று மாலை முகேஷ் ஆக்ராவின் சதர் காவல்நிலைய பகுதியில் ஒளிந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆக்ராவின் ஸ்வாத் போலீஸ் சிறப்பு படை, முகேஷ் தாக்கூரை சுற்றி வளைத்து கைது செய்தது.
அவரை சதர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது தனது துப்பாக்கி ஆயுதங்களை ஒளித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதை கைப்பற்ற ஆக்ராவின் சிறப்புப் படையினரால் வாகனத்தில் நேற்று இரவு முகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார்.
வழியில் வாகனத்திலிருந்து குதித்த முகேஷ் தப்பி மீண்டும் தலைமறைவானார்.
இந்த தகவல அறிந்த ஆக்ராவின் எஸ் எஸ்பியான முனிராஜ், விடியலில் தனது வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார். அப்போது சதர் பகுதியின் வனத்தில் ஒளிந்திருந்த முகேஷ், தன்னை தேடி வந்த போலீஸார் மீது துப்பாக்கியால் சுடத் துவங்கிய போது என்கவுன்டரில் பலியானார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் எஸ்எஸ்பி முனிராஜ் கூறும்போது, ‘‘பதிலுக்கு நாம் பாதுகாப்பிற்காக திருப்பி சுட்ட போது முகேஷ் மீது குண்டுகள் பட்டு சுருண்டு விழுந்தார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் முகேஷ் மீது 40 கிரிமினல் வழக்குகள் பதிவாகி தேடப்பட்டு வந்தார்’’ எனத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28 இல் அலிகரிலிருந்து ஆக்ராவிற்கு எஸ்எஸ்பியாக மாற்றப்பட்ட முனிராஜ், தர்மபுரியின் அக்ரஹாரப் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர். ஆக்ரா பணியை ஏற்றது முதல் முனிராஜ் தலைமையில் இது நான்காவது என்கவுன்டர் ஆகும்.
அனைத்திலும் சேர்த்து இதுவரை நான்கு கிரிமினல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.