Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM

பாரத் பயோடெக் நிறுவனத்தின் குஜராத் ஆலையில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி வர்த்தக ரீதியாக விநியோகம்

அகமதாபாத்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் புதிய ஆலையிலிருந்து கோவாக்சின் மருந்துகள் விநியோகம் நேற்று தொடங்கியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க கோவாக்சின் என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்துள்ளது. நாடு முழுவதிலும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அங்லேஷ்வர் பகுதியில் பாரத் பயோடெக்கின் புதிய ஆலை தொடங்கப்பட்டது. அந்த ஆலையிலும் கோவாக்சின் மருந்து உற்பத்தி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வர்த்தகப் பயன்பாட்டுக்காக நேற்று கோவாக்சின் மருந்துகள் விநியோகத்தை பாரத்பயோடெக் நிறுவனம் தொடங்கியது. கோவாக்சின் மருந்துகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விநியோகம் செய்து தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் மத்திய அமைச்சர் மாண்டவியா கூறியதாவது: கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். தற்போது அங்லேஷ்வரில் திறக்கப்பட்டுள்ள ஆலையிலிருந்து கோவாக்சின் மருந்துகள் விநியோகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் மாதம்தோறும் கூடுதலாக கோவாக்சின் மருந்து உற்பத்தி இருக்கும். நாடு முழுவதும் தங்கு தடையின்றி தடுப்பூசிகளை அனுப்ப இந்த ஆலை உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் அதிகரிக்கும் தொற்று

நாடு முழுவதும் கரோனா தொற்று சற்று குறைந்து வந்தது. கடந்த வாரம் தினசரி வைரஸ் தொற்று 30,000-க்குள் இருந்தது. இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி 37,739 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் கடந்த 25-ம் தேதி 46,280 பேர், 26-ம் தேதி 44,550 பேர், 27-ம் தேதி 46,798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வரிசையில் மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 45,083 பேருக்கு கரோனா தொற்றுஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி தொற்று 40,000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

கேரளாவில் 55% நோயாளிகள்

பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் சிறிய மாநிலமான கேரளாவில் நாள்தோறும் சுமார் 30,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி 32,801 பேருக்கும், 28-ம் தேதி 31,265 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நேற்று 29,836 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

கடந்த 5 நாட்களில் மட்டும் கேரளாவில் புதிதாக 1.5 லட்சம்பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு நேற்று 40 லட்சத்தை தாண்டியது. தற்போது 2,12,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் மொத்த நோயாளிகளில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கேரளாவில் உள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x