

கரோனா பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவைரத்து செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இதையடுத்து 2020 மார்ச் 23-ம்தேதியிலிருந்து திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போதுவரை கரோனா தொற்று பரவல் முடிவுக்கு வராததால் அவ்வப்போது விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை நீட்டிக்கப்பட்ட தடை ஆக. 31 உடன்முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் அதாவது செப். 30 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து பொதுஇயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
வந்தே பாரத் திட்டம்
அதேநேரம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பவும், உள்நாட்டிலிருக்கும் வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மே 2020 முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ‘ஏர் பபுள்’ திட்டத்தின் கீழ் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஜூலை 2020 முதல் இந்த ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.