அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
Updated on
2 min read

அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வைரஸ் தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மனதின்குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி, நேற்று ஒலிபரப்பான 80-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இன்று மேஜர் தயான்சந்த் பிறந்த நாள். அவருடைய நினைவாக இன்றைய தினம் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்திருப்பதால் மேஜர் தயான்சந்தின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும். ஒலிம்பிக் முடிந்து, பாராலிம்பிக்ஸ் நடந்து வருகிறது. இப்போது இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

இந்திய இளைஞர்கள் புதியபாதைகளில் பயணிக்க விரும்புகிறார்கள். குடும்ப பாரம்பரியங்களில் இருந்து விலகி 'ஸ்டார்ட் அப்' தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் மனதில் சாகச உணர்வு மேலோங்கி இருக்கிறது. இதனால் சிறிய நகரங்களிலும்கூட 'ஸ்டார்ட் அப்' கலாச்சாரம் வியாபித்து பரவி வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 30-ம் தேதி (இன்று) கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட உள்ளோம். குஜராத்தின் சோமநாதர் கோயிலில் இருந்து 3 கி.மீ.தொலைவில் பாலகா தீர்த்தம் அமைந்துள்ளது. தனது இறுதிகாலத்தை கிருஷ்ணர் இங்குதான்கழித்தார். சோமநாதர் அறக்கட்டளை வாயிலாக இந்தப் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டம் குறித்துப் பேசும்போது, மத்திய பிரதேசத்தின் இந்தூரை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அந்த நகர மக்கள் தாங்களாகவே முன்வந்து தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுத்துள்ளனர். இதனால் சரஸ்வதி, கான்ஹ் நதிகளின் மாசு குறைந்திருக்கிறது. நகரங்கள் தூய்மையானால் நதிகளும் தூய்மையாகும். நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.

பிஹாரின் மதுபனியில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் வேளாண் பல்கலைக்கழகமும், அங்குள்ள வட்டார விவசாய விஞ்ஞான மையமும் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகின்றன.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த கொண்டாட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதிய உறுதிமொழி ஏற்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 100-வது ஆண்டு சுதந்திர தினத்துக்கு இப்போதே அடித்தளமிட வேண்டும்.

இறுதியாக ஒரு வேண்டு கோளை முன்வைக்கிறேன். அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வைரஸ் தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நாடு முழுவதும் 63 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகளை பயனாளிகளுக்கு செலுத்தியுள்ளோம். எனினும் நாம் எச்சரிக்கையாக, விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். - பிடிஐ

சிவகங்கை ஊராட்சிக்கு பாராட்டு

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சிரங்கால் மிகச் சிறிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சி நிர்வாகம், உள்ளூர் மக்களோடு இணைந்து குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன்படி கிராமப் பகுதிகளில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்படு கின்றன, ஒவ்வொரு நாளும் 2 டன் குப்பைகளை கையாண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராமத்தின் தெருவிளக்குகள் எரிகின்றன. பிற தேவைகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரங்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஊராட்சியின் பணம் மிச்சமாகிறது. சேமிக்கப்படும் பணம் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சி முன்மாதிரியாக விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in