

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ள பவினாபென் படேல் தங்களைப் பெருமைப்படுத்திவிட்டதாக நெகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார் அவருடைய தந்தை ஹம்சுக்பாய்.
முன்னதாக இன்று, ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். ஆரம்பம் முதலே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பவினா தனது உத்திகளை செயல்படுத்த முடியாமல் திணறினார். இருப்பினும் அவர் தளர்வடையாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார். 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் அவர் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பவினாபென் படேல்.
தந்தை நெகிழ்ச்சி:
தனது மகளின் வெற்றி குறித்து ஹம்சுக்பாய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "பவினா எங்களைப் பெருமைப்படுத்திவிட்டார். அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப் போகிறோம். அவருடைய வெற்றியை நாங்கள் கொண்டாடப்போகிறோம்" என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
முன்னதாக சாதனை நாயகி பவினா அளித்த பேட்டியில், "நான் இன்றைய போட்டியின்போது சற்று பதற்றமடைந்து விட்டேன். என்னால் எனது விளையாட்டு நுணுக்கங்களை, உத்திகளை சரியாக செயல்படுத்த முடியவில்லை. அடுத்தமுறை நான் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்தப் பதக்கத்தை நான் என் தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன். எனது பயிற்சியாளர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருக்குமே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.