

மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 24-ம் தேதி மாலை 22 வயது கல்லூரி மாணவி சாமுண்டி மலை அடிவாரத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 6 பேர் ஆண் நண்பரை தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் மாணவியை மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். நள்ளிரவு 12 மணியளவில் கண் விழித்த ஆண் நண்பர் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகாவில் மகளிர் அமைப்பினரும் மாணவ சங்கத்தினரும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினரும் குற்றவாளிகளை தண்டிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கர்நாடக காவல் துறை டிஜிபி பிரவீன் சூட் ஆகியோரை நேரில் சென்று விசாரிக்குமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மைசூரு மாவட்ட போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்
டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் கடும் அதிர்ச்சியில் இருப்பதால் அவரை விசாரிக்க முடியவில்லை. அவருடன் இருந்த ஆண் நண்பரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீஸார், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் நேற்று முன் தினம் சிலரை பிடித்து விசாரித்தனர்.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காவல்துறை டிஜிபி பிரவீன்சூட், மைசூரு மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் சேத்தன் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிஜிபி பிரவீன் சூட் கூறியதாவது:
மைசூரு பலாத்கார வழக்கில் முதல்கட்டமாக 5 பேரை கைது செய்திருக்கிறோம். 5 பேரும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் 17 வயது சிறுவன். இந்த 5 பேரும் ஓட்டுநர், பெயின்டர், எலக்ட்ரீசியன், தச்சு வேலைகளை செய்பவர்கள். ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீஸார் தமிழகத்துக்கு சென்றுள்ளனர். குற்றவாளிகளில் சிலர் மீது நிலுவையில் உள்ள
வழக்குகள் குறித்த விவரங்களை தமிழக போலீஸாரிடம் கேட்டு இருக்கிறோம். அதே போல 17 வயது சிறுவன் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை சேகரித்து வரு கிறோம்.
இந்த குற்றவாளிகள் பணி நிமித்தமாக அடிக்கடி மைசூருவுக்கு வந்து சென்றுள்ளனர். சம்பவத்தன்று சாமுண்டி மலைஅடிவாரத்தில் அவர்கள் மது குடித்துள்ளனர். அதன் பின்னர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அதே வேளையில் ஆண் நண்பரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்கினோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் அங்கு வர தாமதமானதால் குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வழக்கில் விரைவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் குற் றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். அதில் வழக்கு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும்.
இவ்வாறு பிரவீன் சூட் தெரிவித்தார்.
என்கவுன்ட்டர்
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, ‘‘இதுபோன்ற பலாத்காரம் சம்ப வங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு, குற்றவாளிகளுக்கு உடனடியாகவும் கடுமையானதாகவும் தண்டனை வழங்க வேண்டும். பலாத்கார வழக்கில் தெலங்கானா போலீஸார் நடந்து கொண்டதைப் போல (என்கவுன்ட்டர்) கர்நாடக போலீஸாரும் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.