

காப்பு சமுதாயத்தினரின் இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந் துள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதி யில், காப்பு சமுதாயத்தினர் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நேற்று முன் தினம் திடீரென போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, விஜய வாடா-விசாகப்பட்டினம் இடையே செல்லும் ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் ரயில் முழுவதுமாக எரிந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதனிடையே கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆயுதம் தாங்கிய போலீஸார் மற்றும் போலீஸ் படை என 3,500 போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காப்பு சமுதாயத்தினருக்கு உடனடியாக இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தால், அதனால் வரும் சட்ட பிரச்சனைகளுக்கு நான் பொருப்பல்ல என நாயுடு தெரிவித்தார். ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இளைஞர் தற்கொலை
காக்கிநாடாவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று சூரிபாபு என்ற இளைஞர் டிஷ் ஒயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். அவரது பேண்ட் பையில் இருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில், காப்பு சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என எழுதி இருந்தது தெரிய வந்தது.
இதற்கிடையில் ரயில் எரிப்பு சம்பவம் வருத்தம் அளிப்பதாக நடிகர் பவன் கல்யாண் ஹைதராபாதில் நேற்று வருத்தத்துடன் தெரிவித்தார்.