

போலி செய்திகள் அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில், போலிச் செய்திகள், போலியான கருத்துகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அறிவுஜீவிகளின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஊடகம் என்பது அரசியல், பொருளாதாரம் என எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் அரசாங்கம் அதன் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும்.
எல்லா உண்மையும் அரசாங்கத்திடம் இருந்தே வரும் என்று நம்ப முடியாது. சில இடங்களில் ஒருவேளை அரசாங்கம் சர்வாதிகார அரசாக இருந்தால் அங்கே அதிகாரத்தை கட்டமைக்க பொய்கள் பரப்பப்பட்டிருக்கும். இதை கோவிட் 19 பரவலின் தொடக்கக் காலத்தில் காண முடிந்ததது. உலக நாடுகள் சில கரோனா தொடர்பாக போலியான தகவல்களைத் தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உலக சுகாதார மையமும் பெருந்தொற்று காலத்தில் போலி தகவல்கள் தொற்றும் நிலவுவதாக கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரபரப்புச் செய்திகளின் மீது ஈர்ப்பு கொள்வது மக்கள் இயல்பு. பெரும்பாலும் பரபரப்புச் செய்திகள் போலியானவையாக இருக்கின்றன. அதுவும் சமூக வலைதளங்களில் இவை வேகமாகப் பரவுகின்றன. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தான் போலி தன்மை பரவுவதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும். மக்களும் போலி செய்திகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நாம் இப்போது ஒரு விசித்திரமான காலகட்டத்தில் வாழ்கிறோம். இங்கே நான் பேசும் உண்மைக்கும் நீங்கள் பேசும் உண்மைக்கும் இடையே ஒரு போட்டி நிலவுகிறது.
நாம் வாசிக்கும் செய்தித் தாள் நம் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தால் வாசிக்கிறோம். நம் எண்ணங்களைச் சாராதோர் எழுதும் புத்தகங்களை வாசிக்க மறுக்கிறோம். தொலைக்காட்சியில் நம் எண்ணங்கள் மாறான கருத்துகளுடன் யாரேனும் பேசினால் ம்யூட் போட்டுவிடுகிறோம். உண்மையைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
போலி செய்திகளை எதிர்கொள்ள நாம் நமது பொதுத் துறை அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். அதே போல் நமக்கு நடுநிலையான ஊடகம் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.