

மக்கள் மீது குற்றம்சாட்டாமல் கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு 3-வது நாளாக நேற்றும் கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து உள்ளது.
கேரளவில் ஒரே நாளில் 32,801 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,70,703 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32,801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியதாவது:
கோவிட் தொற்று அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதில் கேரள அரசு தோல்வி கண்டு விட்டது. பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு பதிலாக பொதுமக்களை குற்றம் சாட்ட முயற்சிக்கிறது. வீட்டு தனிமைப்படுத்தல், தொடர்புத் தடமறிதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இதனை கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளன. மக்கள் மீது குற்றம்சாட்டாமல் கேரள அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.