

உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டிக் கொள்கிறது, நாடு உங்களை நாளை கொண்டாடும் என பவீனா பட்டேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவின் பவினாபென் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சீனாவில் மியா சேங்கை 7-11 11-7 11-4 9-11 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இவர், 2016ல் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள பவினா பென், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் யிங் ஜோவை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் தங்கம், இல்லாவிட்டால் வெள்ளிப் பதக்கம் என்று உறுதியுடன் அவர் களம் காணவிருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘பவீனா பட்டேலுக்கு வாழ்த்துகள். சிறந்த முறையில் விளையாடியுள்ளீர்கள். உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டி கொள்கிறது. நாடு உங்களை நாளை கொண்டாடும்.
சிறந்த முறையில், எந்தவித நெருக்கடியுமின்றி விளையாடுங்கள். உங்களுடைய திறமையான விளையாட்டு ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது’’ என தெரிவித்து உள்ளார்.