முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் இ-ஷ்ரம் தொடக்கம்

முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் இ-ஷ்ரம் தொடக்கம்
Updated on
1 min read

நாட்டில் உள்ள முறை சாரா பணியாளர்களுக்கு உதவ இ-ஷ்ரம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் முறை சாரா பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கென தனி யாக 12 இலக்க எண் அடங்கிய அட்டை வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

கட்டிட பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்கள், தெருவோர பணியாளர்கள், வீட்டு வேலை புரிவோர் உள்ளிட்ட பலரும் இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் முறை சாரா பணியில் 38 கோடி பேர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் மற்றும் நலத் திட்ட பலன்கள் கிடைக்க இந்த இணையதளம் பாலமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இணையதளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளை தொழிலாளர் அமைச்சகம், மாநில அரசு மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மேற்கொள்ளும். பதிவு செய் துள்ள தொழிலாளர்களுக்கு 12 இலக்க அட்டை இலவசமாக அளிக்கப்படும். இது நாடு முழுவதும் செல்லுபடியாகும். ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இதில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் வங்கி கணக்கு எண் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதை ஒருங்கிணைக்க தொழிலாளர் அமைச்சகம் கட்டணமில்லா 14434 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதில் பதிவு செய்த அனைத்து பணியாளர்களுக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு வசதி ஓராண்டுக்கு கிடைக்கும். இத்திட்டத்தில்கீழ் பணியின்போது உயிரிழப்பு நேர்ந்தால் ரூ.2 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in